“தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-மலேசியத் தமிழர் சங்கம் அறிவிப்பு
தமிழர் இனம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களில் பலர் இந்துக்களாகவும், சிலர் இஸ்லாம், கிருஸ்துவ சமயத்தையும், பௌத்தம் சமய நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தமிழ் பண்பாடு உள்ளது. அது மண் சார்ந்த தன்மையுடயது என்பதை மறுக்க முடியாத உண்மை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்வார்(குறள்1033) என்ற திருவாய் மொழிக்கேற்ப
உழவுத் தொழிலைச் சார்ந்து தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்ட இந்த தொன்மையான இனம், ஆதவனை வணங்கி, அவனுக்கு உறுதுணையாக இருந்த எருது,பசுக்கன்றுகளை போற்றி, புது நெல்லைப் புது பானையில் இட்டு பொங்கி மகிழ்ந்தனர். அதுவே அவனுக்கு “தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்” எனற நம்பிக்கை- புத்தாண்டாகத் தொடங்கியது. பொங்கல் திருநாள் தமிழருடைய தனிப்பெரும் திருநாள்.
தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை இப்போது தோன்றியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்த ஒன்று. அப்போது, 1935இல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அன்றையத் தமிழறிஞர் பெருமக்களும், 500உம் மேற்பட்ட சான்றோர்கள் கூடி, அலசி ஆராய்ந்து எடுத்த முடிவுத் தான் தமிழருக்கான புத்தாண்டு பிறப்பு தை முதல்நாளே என்று. அவர்களுள், தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்ரமணியம் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா. மு. வேங்கடசாமி நாடார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார் மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் போன்றோரும் அடங்குவர். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகின்றேன்.
தமிழ்மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர். `மொழியினம்’ எனும் வழக்கு இதனால்தான் வந்தது. அதே வேளையில், ஒரே இனத்தவர் ஒரே சமயத்தவராக இருப்பதில்லை; ஒரே சமயத்தவர் ஒரே இனத்தவராகவும் இருப்பதில்லை. சில சூழல்களில் சமயத்தால் வேறுபாடு இருப்பினும், சில பண்பாட்டுக் கூறுகள் ஓர் இனத்தாரைப் பிணைத்திருக்கும். அத்தகையப் பண்பாட்டுக் கூறு பொங்கல் திருநாள். எனவே தான், பொங்கலை உலகெங்கும் வாழும் பல் சமயத் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். இன்றைய உலகில் வல்லரசு நாடுகளும் கூட தமிழனத்தின் பெருமையை உணர்ந்து பொங்கல் உண்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த நாட்டைப் பொறுத்தமட்டில், கோலாலம்பூர் முச்சங்கம் (இதுவே இப்பொழுது மலேசியத் தமிழர் சங்கம்) தமிழர் திருநாள் விழாவை 2000-ஆம் ஆண்டு ஜனவரி 6-இல் இணைந்து நடத்தியது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் “தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” என்று கவிச்சுடர் காரைக்கிழார் தலைமையில் அறிவிப்பு செய்யப்பட்டது என்பது இங்கே நினைவுக் கூறத்தக்கது.
இப்படியாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சனைக்கு தீர்வுக் காணப்பட்டு விட்டது. இதனை இன்னும் பேசிக் கொண்டு பொழுதை கழிப்பதினால் எந்தவொரு பயனும் விளையப் போவதில்லை. மலேசியத் தமிழர் சங்கத்தைப் பொறுத்தமட்டில், “தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு” என்பதில் மிகத் தெளிவாக உள்ளோம்.
“அன்பு வேண்டும்; உலக மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு மிகுந்த அன்பு வேண்டும்; அந்த அன்புதான் அழுகையைக் குறைக்கும்; அவலங்களைக் குறைக்கும்; அப்படிப்பட்ட அன்பின் வருகைதான் தைத்திங்களின் மலர்ச்சி. பொங்கல் பொங்குகின்றது, இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்குகின்றது. புத்தரிசி, புதுப்பானை, புது வெல்லம் கூட்டுகின்ற கலவை, பொங்கலாகத் தித்திப்பதைப் போல, அன்பு, வீரம், உழைப்பு இந்த மூன்றின் கலவை தமிழரின் பண்பாடாய் முகிழ்கின்றது. மார்கழியின் வைகறைப் பொழுதில் பாவை நோன்பு நோற்ற கன்னியர்களின் கனவுகள் நினைவாக மலர்வது தைத் திங்களில்தான்.” (சமய வாழ்வு; தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்; பக்கம் 105)
இந்து சக்கத்தின் டத்தோ மோகன்ஷான் போன்றோர் சித்திரையைப் புத்தாண்டாக கொண்டாட விரும்பினால், தாராளமாக கொண்டாட்டும். இனியும், இதனை ஒரு பிரச்சனையாக உருவாக்காமல், நம் சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற வழிவகைகளைக் காண்பதுச் சிறப்பானதாக அமையும் என்று மலேசியத் தமிழர் சங்கத்தின் தேசியத் தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெ.கணேசன் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.
எம்.ஜெ.கணேசன்,
தேசியத் தலைவர்
